Monday, September 26, 2016

ஸ்ரீ தயா சதகம்

ஸ்ரீ தயா சதகம்

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ ரங்கநாயகி ஸமேத ஸ்ரீ ரங்கநாத பரப்ரஹ்மணே நம:

ஸ்ரீ பத்மாவதி ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பரப்ரஹ்மணே நம:
ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் திருவடிகளே சரணம்


பெருமாளிடம் உள்ள கருணை என்னும் பண்பை, தாயாக உருவகம் செய்து "தயா சதகம்' என்ற நூல் எழுதப்பட்டது. இதில் நூறு ஸ்லோகங்கள் உள்ளன. அதில் ஒரு ஸ்லோகத்தில், ""தயாதேவியே! மென்மை மிக்க மனம் கொண்டவளே! பக்தர்கள் படும் துன்பத்தைப் பொறுக்காதவளே! தேவர்களைக் காப்பவளே! தன்னையும் விட, உற்சாகத்துடன் பக்தர்களை நீ நல்வழிப்படுத்துவதால், திருமலை (திருப்பதி) பெருமாள் உன் மீது அளவில்லாத அன்பு கொண்டிருக்கிறார். நீ சொல்லும் எதையும் அவர் மறுப்பதில்லை. மங்களம் தருபவளே! பெருமை மிக்க குணங்களால் பெருமாளையும் விட, உன்னையே எல்லோரும் மிகுதியாக போற்றுகின்றனர்,'' என்று சொல்லப்பட்டு உள்ளது. தன்னை வணங்குதை விட, பிறரிடம் கருணை செலுத்துவதை கடவுள் விரும்புகிறார் என்பது இதன் கருத்து.


தனியன்
ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி

ஸ்லோகம் – 1
ப்ரபத்யே தம் கிரிம் ப்ராய: ஸ்ரீநிவாஸ அனுகம்பயா
இக்ஷுஸார ஸ்ரவந்த்யா இவ யந்மூர்த்யா சர்க்கராயிதம்.

திருமகள் கேள்வனின் கருணை வெள்ளம்
கரும்பின் சாறுபோல் பெருக்கெடுத் ததுவே
ஒருமலை யாகவே உருகிவடுத் ததுவாம்
திருவேங்கட மலையே நீயே சரணம்!

வேங்கடவன் என்ற கருப்பஞ்சாறே,
நதியென பெருகி சக்கரைகட்டியாகி;
வேங்கட மலையென உறைந்திருக்க,
கதியற்ற அடியேன் சரணடைகின்றேன்.

பொருள் – ஸ்ரீநிவாஸனுடைய தயை என்பது கருப்பஞ்சாறாகப் பெருகி உள்ளது. இது ஆறு போன்று ஓடிச்சென்று, சர்க்கரைக் கட்டி போன்று உறைந்து நின்றது.  இப்படிப்பட்ட சர்க்கரை மலையாகிய திருவேங்கடமலையை நான் சரணம் அடைகிறேன்.

விளக்கம் – வேம் என்றால் பாவம் என்று பொருள். கடம் என்றால் கொளுத்துவது எனறு பொருள். ஆக வேங்கடம் என்றால் பாவங்களைக் கொளுத்துவது என்றாகிறது. ஸ்ரீநிவாஸனின் தயை என்ற குணம், பாவத்தை மட்டுமே விரும்பிச் செய்யும் நமது பிழைகளைப் பொறுத்துக் கொள்வதையே தனது இயல்பாக உடையது. ஆக வேங்கடமலையும் இதனையே செய்கிறது. எனவே ஸ்ரீநிவாஸனின் தயை என்ற குணம் செய்கின்ற செயலையே வேங்கடமலையும் செய்வதால், அந்தத் தயை குணமே திருவேங்கட மலையாக நின்றதோ என்று தோன்றுகிறது.
ஸ்ரீநிவாஸன் ஒரு பெரிய கரும்பு என்று வைத்துக் கொண்டால், அந்தக் கரும்பிலிருந்து வரும் சாறானது, ஆறு போன்று பெருகி, மலையாக உறைந்தது. கரும்பின் சக்கைகளை நீக்கி விட்டுச் சாறை மட்டும் எடுத்துக் கொள்வது போல் – ஸ்ரீநிவாஸனிடம் உள்ள “பாவங்களுக்குத் தண்டனை விதிப்பது” போன்ற செயல்களைத் தள்ளி விட்டு, சாறு போன்ற தயை குணத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்

தயை குணம் இல்லாதவனை கல் போன்றவன் என்பார்கள் . இங்கு தயை குணத்தை, கல் போன்ற ஒரு மலையுடன் ஒப்பிட்டுக் கூறுவது எவ்வாறு பொருந்தும் என்ற கேள்வி எழலாம். இதற்குச் சமாதானம் – மலை எவ்விதம் அசையாமல் உள்ளதோ, அது போன்று நம்மிடம் ஸ்ரீநிவாஸனின் தயை என்பது அசையாமல் உள்ளது என்று கருத்து. இங்கு உள்ள ஆறு என்பது ஸ்ரீநிவாஸனின் தயையானது, ஆகாச கங்கை போன்ற திருமலையில் உள்ள நதிகளைப் போன்று உள்ளதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

சரணாகதி செய்வதற்கு நமது பாவங்கள் நீங்க வேண்டும். ஆகவே, நமது பாவங்களை நீக்குதல் என்னும் செயலைச் செய்யும் திருவேங்கடமலையை முதலில் சரணம் அடைந்தார்.

அநுகம்பை என்ற பதம் ஒரு ஜீவன் துன்பம் எற்பட்டு நடுங்கும்போது, அவன் மீது கொண்ட இரக்கம் காரணமாகத் தானும் (ஸ்ரீநிவாஸனும்) நடுங்குவதாகப் பொருள். வேதங்களில் சூரியன் முதலானோர் ஸ்ரீநிவாஸனுக்குப் பயந்து நடுங்கியபடி, தங்களது செயல்களைச் செய்கின்றனர் என்று கூறும்போது இங்கு ஸ்ரீநிவாஸன், ஜீவன் ஒருவன் துன்பத்தினால் நடுங்கும்போது தானும் நடுங்குவதாக வியப்பாகக் கூறினார்.
ஸ்ரீமத் பாகவதத்தில் ஆறாவது ஸ்கந்தம், 18ஆவது அத்யாயம், 65 ஆவது ச்லோகத்தில் இந்திரன் “ஸ்ரீநிவாஸா அநுகம்பயா” என்று கூறியதை, இங்கு இவரும் கூறுகிறார்.

No comments:

Post a Comment