Wednesday, March 30, 2016

கஞ்சமலை சித்தர்கோவில் (கஞ்சன் மலை )

கஞ்சமலை சித்தர்கோவில்


அமாவாசை கோவில் என்று போற்றப்படும் சித்தேஸ்வரர் திருக்கோவில் கஞ்சமலை என்னும் திருத்தலத்தில் உள்ளது. புராண வரலாறு கொண்ட கஞ்சமலையில் தங்கம் உள்ளதாகச் சொல்வர்.

கஞ்சம் என்னும் சொல்லுக்கு பொன் என்று பொருள். (வேறு பொருள்களும் உள்ளன.) எனவே கஞ்சமலைக்கு அருகில் ஓடும் ஆறு பொன்னி நதி என்று பெயர் பெற்றது.
இந்த மலைப்பகுதியில் உள்ள கனிமத்திலிருந்தும் மூலிகைச் சாற்றினைக் கொண்டும் அந்தக் காலத்தில் பொன் தயாரித்திருக்கிறார்கள். அந்தப் பகுதி பொன்னகர் என்றும்; இப்பொன்னை மாற்றுரைத்துப் பார்த்த இடம் ஏழு மாத்தனூர் என்றும் அழைக்கப் படுகிறது. இவற்றுள் ஏழு மாத்தனூர் என்னுமிடம் இன்றும் இந்த கஞ்சமலைக்கு அருகில் உள்ளது.

கஞ்சமலையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. இதில் அதிகமாகக் காணப்படுவது இரும்புத் தாது. இந்த இரும்புத் தாதுகளைப் பொன்னாக்கும் சக்தி கொண்ட மூலிகைகள் இங்கு உள்ளன. இரும்புத் தாதுவின் சக்தியால்தான் இங்கு காணப்படும் மூலிகைகள் கருமை நிறத்தில் இருப்பதுடன், மற்ற மலைப் பிரதேசங்களில் கிடைக்கும் மூலிகைகளைவிட சத்தும் சக்தியும் அதிகம் கொண்டவை யாகத் திகழ்கின்றன. இதனால்தான் கஞ்ச மலைப் பகுதியை கருங்காடு என்றார்கள். இங்கு விளைந்த கரு நெல்லியைத்தான் மன்னன் அதியமான் ஔவை யாருக்கு அளித்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

பராந்தகச் சோழன், தில்லை நடராஜப் பெருமானின் கோவிலுக்குப் பொன் வேய்ந்ததாக வரலாறு சொல்கிறது. அந்தத் தங்கத்தைக் கொடுத் தது இந்த கஞ்சமலைதான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வர். அது மட்டுமல்ல; மாவீரன் அலெக்ஸாண்டருக்கு போரஸ் என்ற புருஷோத் தமன் வாள் ஒன்றைப் பரிசளித்தான். அந்த வாள் இந்தக் கஞ்சமலையில் கிடைத்த இரும்பினால் உருவாக்கப்பட்டது என்றும் வரலாற்றில் குறிப்பு உள்ளது.

கஞ்சம் என்பதற்கு தாமரை என்ற பொருளும் உண்டு.
கஞ்சன் என்பது பிரம்மதேவனின் பெயர்களுள் ஒன்று. தாமரைக் கருவினில் உதித்ததால் பிரம்மனின் பெயர்களுள் ஒன்றாயிற்று கஞ்சம். மேலும் இம்மலை பிரம்மதேவனால் உண்டாக்கப்பட்டது என்று புராணம் கூறும்.

முன்னொரு காலத்தில் சித்தர்கள் கற்ப மூலிகை எங்கு கிடைக்கும் என்று தேடி அலைந்தார்கள். அவர்கள் முயற்சி வீண் போனதால் கஞ்சன் என்ற திருப்பெயர் கொண்ட பிரம்மதேவனை நோக்கி பலகாலம் தவம் மேற்கொண்டார்கள். அவர்களின் தவத்தினைப் போற்றிய பிரம்மதேவன் சித்தர்கள் விரும்பும் அனைத்து மூலிகைகளும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு அருள்புரிந்தார். அதன்படி ஓர் அற்புதமான மலையைப் படைத்தார். அந்த மலையில் விருட்சங்கள், மூலிகைச் செடிகள் தோன்றி காடாகக் காட்சி தந்தன. அந்தக் காட்டிற்குள்ளும் மலைச்சரிவிலும் மலை இடுக்குகளிலும் பல அரிய மூலிகைகளை பிரம்மன் தோற்றுவித்தார்.

இம்மலையில் கருநெல்லி மரம், வெள்ளைச் சாரணச் செடி, நிழல் சாயா மரங்கள், இரவில் ஒளிவீசும் ஜோதி விருட்சங்கள், உரோமத் தருக்கள், கனக மரங்கள், உடும்புகள் உண்ணாச் சஞ்சீவி கள், ஆயுதங்களால் ஏற்படும் காயத்தினை உடனே குணப்படுத்தும் சல்லிய கரணி, மனித உடலில் உள்ள எலும்புகள் முறிந்தாலும் உடைந்தாலும் துண்டுபட்டாலும் உடனே இணைக்கக் கூடிய சந்தான கரணி, வெட்டுக் காயத்தால் ஏற்படும் தழும்பால் விகாரமாகத் தெரியும் முக அமைப்பை மீண்டும் அழகு படுத்தக் கூடிய சாவல்ய கரணி, உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் மீண்டும் உயிர் பெற்று வாழக்கூடிய அமுதசஞ்சீவி கரணி உள்ளிட்ட பல அற்புதமான மூலிகை கள், விருட்சங்கள், கிழங்குகள், வேர்கள் என நிரம்பியிருக்கும் என்றும்; அம்மூலிகைகளைக் கொண்டு கற்ப மருந்தினைச் செய்து பலன் பெறலாம் என்றும் பிரம்மன் அருளியதாக “கரபுரநாதர்’ புராணம் சொல்கிறது.

பிரம்மன் தோற்றுவித்த இந்த அற்புதமான கஞ்சமலையில் ஏராளமான உயிர் காக்கும் மூலிகைகள் இன்றும் உள்ளன. அந்த மூலிகைகளை நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து, தகுந்த மந்திரம் சொல்லி காப்புக்கட்டி, வழிபட்டு, சாப நிவர்த்தி யானதும் அந்த மூலிகையிடம் சம்மதம் பெற்று அதனைப் பறித்து, செடியாக இருந்தால் வேர் அறுபடாமலும், கத்தியால் காயப்படுத்தாமலும் தகுந்த முறையில் அதனைக் கொண்டுவந்து நல்ல நாள் பார்த்துப் பயன்படுத்தினால், ஆரோக்கியமாக வாழலாம் என்று விவரம் அறிந்தோர் சொல்வர்.

இவ்வளவு சிறப்புப் பெற்ற கஞ்சமலை சேலத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தத் தொடர் மலையின்மேல் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலுக்குச் செல்வது சிறிது கடினம் என்கிறார்கள் அந்த ஊர் மக்கள். மலை அடிவாரத்திலிருந்து காலை ஆறு மணியளவில் புறப்பட்டால் கோவிலை அடைய பத்து மணிக்கு மேல் ஆகுமாம். உடல் வலிமை உள்ளவர்கள் மட்டும் கஞ்சமலைமேல் உள்ள கோவிலுக்குச் செல்கிறார்கள்.

அற்புதங்கள் நிறைந்த இந்தக் கஞ்சமலையைத் தரிசித்தாலே பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும் என்பர். இந்த மலைக்கு மேற்குப் பகுதி யில்தான் புகழ் பெற்ற சித்தேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. சித்தேஸ்வரர் என்றதும் கருவறையில் சிவலிங்கம் உள்ளது என்று நினைக்க வேண்டாம். இங்கு வாழ்ந்த- தற்பொழுதும் வாழ்ந்து கொண்டி ருக்கிற சித்தர்களில் ஒருவருக்குத்தான் கோவில் கட்டி அவர் திருவுருவை ஸ்தாபித்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மூல ஸ்தானத்தில் அருள்புரியும் சித்தேஸ்வரரின் திருவுருவம் ஓர் இளம் யோகியின் திருவுருவம் ஆகும். சின்முத்திரையுடன் தவக்கோலத்தில் கம்பீரமாக அமர்ந்த நிலையில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அவர் அருள்பாலிக் கும் கருவறைக்கு அருகில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இக்கோவிலின் வெளியே தனி மண்டபத்தில் நந்தியெம் பெருமான் எழுந்தருளி உள்ளார்.

மூலன் என்ற பெயர் கொண்ட சித்தர் ஒருவர் தன் தேகத்தை காயசித்தி முறையில் இளமை யாக்கிக் கொள்ள தன் வயதான சீடருடன் கஞ்ச மலைக்கு வந்தார். தன் சீடரிடம் சிற்றோடைக்கு அருகில் சமையல் செய்யச் சொல்லிவிட்டு, காயகல்ப மூலிகையைத் தேடிச் சென்றார். குருவின் கட்டளைப்படி அந்தச் சீடர் சமையல் செய்ய ஆரம்பித்தார். சோறு கொதித்துப் பொங்கியது. அப்போது சுற்று முற்றும் பார்த்த சீடர் ஒரு செடியைப் பிடுங்கி, அருகில் ஓடிய நீரோடையில் அந்தச் செடியைக் கழுவி சுத்தம் செய்து, அகப்பை போல் சோற்றினைத் துழாவினார். பொங்கிய சோறு அடங்கியது. ஆனால், சோறு கறுப்பு நிறமாக மாறியது. இதனைக் கண்டு அஞ்சிய சீடர், குரு வந்தால் கோபித்துக் கொள்வாரே என்ற அச்சத்தில் அந்தச் சோற்றினைத் தான் உண்டு விட்டு, புதிதாக சோறு சமைத்தார். சிறிது நேரம் கழித்து குரு அங்கு வந்தபோது சீடரைக் காண வில்லை. அங்கு ஓர் இளைஞன்தான் நின்று கொண்டிருந்தான். அந்த இளைஞனிடம், “”இங்கிருந்த முதியவர் எங்கே?” என்று குரு கேட்டார். தன் குருவின் காலடியில் விழுந்து வணங்கிய சீடர், “”குருவே, என்னை அடையாளம் தெரியவில்லையா? நான்தான் உங்கள் சீடன்” என்றார்.
அதிசயமுற்ற குரு, “”நீ இப்பொழுது மிகவும் இளமையாகக் காட்சி தருகிறாயே, எப்படி?” என்று விவரம் கேட்டார். சீடர் சோறு பொங்கும் போது நடந்த நிகழ்ச்சியைக் கூறினார்.

அதைக் கேட்ட குரு, “”அப்படியென்றால் அந்த மூலிகைச் செடி எப்படி இருந்தது? அந்தச் செடியின் பகுதி எங்கே?” என்று கேட்டார்.

“”குருவே, தாங்கள் கோபித்துக் கொள்வீர்கள் என்று எண்ணி அந்தச் செடியை உடனே அடுப்பில் போட்டு எரித்து விட்டேன்” என்றார் சீடர்.


“எந்த மூலிகையைத் தேடி வந்தேனோ அது இங்கேயே இருப்பதை அறியாமல் போனேனே’ என வருந்தினார் குரு. சில அரிய மூலிகைகள் தங்களைப் பறிக்க வருகிறார்கள் என்பது தெரிந்த தும், கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் பதுங்கிக் கொள்ளும். ஆனால், ஏதுமறியாத சீடர் திடீரென்று அந்த காயகல்ப மூலிகைச் செடியைப் பறித்து விட்டதால் இந்த அற்புதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார் குரு.

தன் சீடரை அழைத்த குரு, “”நீ உண்ட சோற்றினை என் கையில் கக்கு” என்றார். சீடனும் சிரமப்பட்டு தான் உண்ட சோற்றைக் கக்க, அதனை உண்டார் குரு. உடனே முதுமை மாறி இளம் உருவத்தைப் பெற்றார். இவ்வாறு மூலனும் அவரது சீடரும் இளமை பெற்றதால், இத்தலத்திற்கு அருகில் உள்ள ஊர் “இளம் பிள்ளை’ என்று பெயர் பெற்று இன்றும் அதே பெயரில் திகழ்கிறது.

இத்தலத்தில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்தேஸ்வர சுவாமி, திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்று அழைக்கப்படும் காலங்கி நாதர் என்று சொல்கிறார்கள். சித்தேஸ்வரராகிய காலங்கி நாதர் பறக்கும் தன்மை பெற்றவர். சித்து நிலையில் தன் சரீரத்தை இரும்புக்கல் தாதுவாக்கி, காந்த நீர் சுழற்சியில் உள்ளிட்டு, ஓட்டகதியில் மின்காந்த சக்தியாக இன்றும் கஞ்சமலையில் வாழ்ந்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.

சுமார் அறுபது ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலைப்பகுதியில் எங்கு தோண்டினாலும் நீர் வளம் நிறைந்து காணப்படுகிறது.

இத்திருக்கோவில் உள்ள பகுதியில் புனிதத் தீர்த்தக் குளங்கள் உள்ளன. நாம் முதலில் இப்பகுதியில் நுழைந்ததும் இரண்டு தீர்த்தக் கிணறுகளைக் காண்கிறோம். இதனை ராகு- கேது தோஷம் நீக்கும் தீர்த்தக் குளம் என்று சொல்கிறார்கள்.
இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை வாடகைக்குத் தருகிறார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப் படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். மலையிலிருந்து சுனை வழியாக ஊற்று நீர் வருகிறது என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சி அன்று மக்கள் கூட்டம் இங்கு நிறைந்து காணப் படுகிறது.

இக்கோவிலின் கருவறைக்குப் பின் படிக்கட்டுகள் அமைந்த ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. படிக்கட்டுக்கு அருகில் சுதையாலான பெரிய நந்தி ஒன்றும் உள்ளது. இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படு கின்றன. அங்கு விற்கப்படும் உப்புப் பொட்டலங் களை வாங்கி நம் தலையில் வைத்துக் கொண்டு, பிறகு தலையைச் சுற்றி இந்தக் கிணற்றில் எறிந்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வரவேண்டும்.

ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோது கிறது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறு கிறது. இக்கோவிலுக்கு அருகே சிற்றோடை உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றாமல் தெளிந்த நீராக ஓடிக் கொண்டிருக்குமாம். இந்த ஓடைக்கு அருகில் பல நாழிக் கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளில் கைக்கு எட்டும் ஆழத்திலேயே நீர் உள்ளதால், வாளிகள் மூலம் நீர் எடுத்துக் குளிக்கிறார்கள்.

இக்கோவில் வளாகத்தில் உள்ள திறந்த வெளி மண்டபத்தில் ஒரு பெரிய மேடை உள்ளது. அந்த மேடையில் நாகர் சிலைகள் பல உள்ளன. மேலும், சர்ப்பக் குடையில் அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான் உள்ளார். அதேபோல் சர்ப்பக் குடையின்கீழ் நான்கு கரங்களுடன் முருகப் பெருமான் தனித்து நிற்கிறார். இந்தச் சிலைகள் எல்லாம் நாக தோஷங்கள் நீங்குவதற் காக பக்தர்கள் கோவில் குருக்கள் மூலம் பிரதிஷ்டை செய்யப் பட்டவையாம். மேலும் இத்தலம் பாம்பாட்டிச் சித்தரின் அருள் பெற்ற தாகவும் சொல்வர்.

இத்தலத்தில் அருள் புரியும் சித்தேஸ்வரரைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உள்ளது.
கஞ்சமலை அடி வாரத்தில் உள்ளது நல்லணம்பட்டி என்னும் ஊர். இங்குள்ள சிறுவர் கள் மாடுகளை மேய்ப்பதற்காகக் காட்டிற்குச் செல்வது வழக்கம். பொழுதுபோக்கிற்காக அவர்கள் விளையாடும்போது, தோற்றவன் தலையில் வென்றவன் குட்டுவான். அப்போது ஒரு புதிய சிறுவன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டான். தினமும் அவனே வெற்றி பெற்று தோற்றவர்கள் தலையில் குட்டுவான். மாடு மேய்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்த உணவினை நண்பகலில் சாப்பிடும்போது, அந்தப் புதிய சிறுவன் அங்கிருந்து விலகிச் சென்று மாடுகளின் மடியில் வாய் வைத்துப் பாலை உறிஞ்சிக் குடிப்பான். இதனைக் கண்ட ஒரு சிறுவன் தன் தந்தையிடம் கூறவே, மறுநாள் இந்தக் காட்சியை மறைந்திருந்து பார்த்தார் அவர். அந்தச் சிறுவன் மாடுகளின் மடியில் பால் குடிப்பதைக் கண்டதும், கோபமுற்ற அவர் பக்கத்திலிருந்த கயிற்றினால் அவனை அடித்தார். அடிபட்ட சிறுவன் இப்பொழுது கருவறை உள்ள இடத்தில் தவக்கோலத்தில் அமர்ந்தானாம். பல நாட்கள் தவத்தில் அமர்ந்த அந்தச் சிறுவன்தான் சித்தேஸ்வர சுவாமியாகக் காட்சி தருகிறார் என்கிறார்கள்.

அன்று கயிற்றால் அடிபட்ட நிகழ்ச்சியைக் கொண்டு இங்கு சித்திரை மாதத்தில் விழா நடைபெறுகிறது. அந்தச் சிறுவனை அடித்தவர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் விரதம் மேற் கொண்டு, விழா சமயத்தில் முடி எடுத்து நீராடி, அங்கப் பிரதட்சணம் செய்து கோவிலின்முன் அமர்வார். அப்போது அவரை மெல்லிய கயிற்றி னால் அடிப்பார்கள். அடிப்பவர்கள், அடிபடுபவரி டம் எப்பொழுது மழை பெய்யும் என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அவர் பதில் கூறுவார். அவரது அருள்வாக்கு பலிக்குமாம். இந்த நிகழ்ச்சிதான் இந்த விழாவின் உச்சகட்டம் என்கிறார்கள்.

சித்திரை மாதப் பௌர்ணமி அன்றும் அதற்கு அடுத்த நாளும் இத்திருக்கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சமையல் செய்து அன்னதானம் வழங்குகிறார்கள். வாழை இலைக்குப் பதில் பாக்கு மட்டை பயன்படுத்தப்படுகிறது.

சித்தேஸ்வர சுவாமி கோவிலுக்கு கிழக்கே ஒரு சிறிய மலை உள்ளது. இதனை தியான மலை என்கிறார்கள். இம்மலையின் மேல் ஏறுவதற்குப் பாதை இல்லை. கரடுமுரடான பகுதியில் சிரமப் பட்டு ஏறினால் சுமார் பதினைந்து நிமிடங்களில் மேலே போய்விடலாம். அங்கே சுமார் பத்தடிக்கு பத்தடி அளவில் சமதளம் உள்ளது. அதன் நடுவில் ஒரு பாறை உள்ளது. அதனை தியானப் பாறை என்பர். அந்தத் தியானப் பாறைக்கு எதிரில் ஒரு சிறிய கோவில் உள்ளது. அதில் சந்தன மகாலிங்க சுவாமி சிறிய திருவுருவில் எழுந்தருளியுள்ளார். அவரைச் சுற்றி சில தெய்வங் களும் உள்ளன. அருகில் தல மரமான சந்தன மரச்செடி உள்ளது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று அந்தத் தியானப் பாறையில் யாராவது ஒரு சித்தர் அமர்ந்து விடியும்வரை தியானம் செய்வது வழக்கமாம். புகை வடிவில் உருவில்லாத வெள்ளை நிற நிழல்போல் காட்சி தருவதை அந்த ஊர் மக்களும் பக்தர்களும் அடிவாரத்திலிருந்து தரிசித்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் யாரும் அந்த மலைமீது ஏறிச் செல்வதில்லை. காலை ஆறு மணிக்கு மேல் அங்கு சென்று பார்த்தால், சித்தர் அமர்ந்து தவம் செய்த அந்தப் பாறையிலிருந்து ஒரு மெல்லிய ஒலி எழும்பு வதையும் அந்தப் பாறை லேசாக அதிர்வது போலவும் இருக்கும் என்கிறார்கள். இந்த நிலை காலை ஏழு மணி வரை- அதாவது சூரிய ஒளி அந்தப் பாறைமீது விழும்வரை நீடிக்குமாம். இந்தத் தியானப் பாறை உள்ள மலைமீதிருந்து பார்த்தால் கஞ்சமலையின் முழுத்தோற்றத்தையும் தரிசிக்கலாம். இங்கும் மலைமேல் அன்னதானம் நடைபெறுகிறது.

இன்னொரு அதிசயமான செய்தியும் உண்டு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கஞ்சமலையில் வகிக்கும் சித்த புருஷர்கள் ஜோதி வடிவில் கஞ்சமலையை வலம் வருவதைத் தரிசிக்கலாம். இரவு பதினோரு மணிக்கு மேல் கஞ்சமலையின் மேல்பகுதியில் சிறிய அளவில் நட்சத்திரம்போல் ஜோதிகள் காணப்படுமாம். அவை மெதுவாக நகர்ந்து மலையை வலம் வரும் என்று சொல்லப்படுகிறது. எல்லாரது கண்களுக்கும் ஜோதி தென்படாதாம். இந்தத் தரிசனத்தைக் காண்பவர்கள் பாக்கியவான்கள்.

அற்புதமான உயிர்காக்கும் மூலிகைகள்- குறிப்பாக காயகல்ப மூலிகைகள் நிறைந்த வியத்தகு செய்திகளைக் கொண்ட இந்த மலை மிகவும் போற்றக் கூடியது என்றால் மிகையல்ல.

இந்த மலைப்பகுதியில் கனிமங்கள் நிறைந்து காணப்படுவதால்தான், இந்த மலைக்கு அருகே சேலம் இரும்பாலை (உருக்காலை) அமைந்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment