Friday, January 24, 2014

பிரதோஷம் பிறந்த கதை!



தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் இரு தரப்பிலும் பலர் இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று வந்தனர். இதற்குக் காரணம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்.

இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள். பிரம்மனை நாடினர். அவர் அவர்களைத் திருமாலிடம் அழைத்து சென்றார். திருமால், "திருப்பாற் கடலைக் கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்றார்.'' மேலும் அவர், "தேவர்களாகிய நீங்கள் மிகவும் பலம் குன்றியிருக்கிறீர்கள்.

எனவே உங்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களை உதவிக்கு அழையுங்கள். அவர்களுக்கு அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி அழைத்தால் வருவார்கள்'' என்று கூறினார்.

அவ்வாறே தேவர்களும், அசுரர்களை அழைத்தனர் அசுரர்களும் சாகாத்தன்மை பெற்ற அந்த அற்புத அமிர்தம் தேவர்களின் கைக்குக் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன், அமிர்தம் கிடைத்தவுடன் தாங்களே அதைத் தட்டிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒப்புக் கொண்டனர்.

ஒரு தசமித் திதியில், "மந்திரகிரி'' மலையை மத்தாகவும், "வாசுகி'' என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து கடைய தொடங்கினார்கள். அப்போது தங்களுக்கு அதிகப்பலம் உள்ளது என்ற ஆணவத்தால், தேவர்கள் சுட்டிக்காட்டிய வால்பகுதியை அரக்கர்கள் பிடித்துக் கொள்ளாமல், தங்கள் கவுரவத்துக்குப் பாம்பின் தலைப் பாகமே ஏற்றது என்றனர்.

அசுரர்கள் தலையைப் பிடித்துக் கொள்ள தேவர்கள் வாலை பிடித்துக் கொள்ள இருவரும் சேர்ந்து கடைய ஆரம்பித்தனர். அப்போது தக்க பிடிமானம் இல்லாததால் "மந்திரகிரி'' மலை நிலை குலைந்து, பாற்கடலுக்கடியே மூழ்க ஆரம்பித்தது! உடனே திருமால் ஆமை வடிவம் எடுத்து, (கூர்ம அவதாரம்) மலையின் கீழே சென்று அதனைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டார்.

இதனால் மந்திரகிரிமலை கடைவதற்கு ஏற்ற நிலைக்குத் தயாரானது. இவர்கள் பாற்கடலைக் கடைந்தது தசமி திதி என்பதால் ஒருவேளையுண்டு, மிக உற்சாகத்துடன் கடைந்தனர். மறுநாள் விரத தினம் ஏகாதசி என்பதால் எல்லோரும் உணவு எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து கடைந்தார்கள்.

இதனால் நேரம் ஆக, ஆக எல்லோருக்கும் பசியோடு, களைப்பும் சேர்ந்து கொண்டது. மேலும் அந்த நேரம் வாசுகி பாம்பானது வலி பொருக்க முடியாமல், பெருமூச்சுவிட, அந்த மூச்சின் விஷத்தன்மையினைத் தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென்று சுனாமி வந்தது போல் கொந்தளிக்கத் தொடங்கியது.

வெண்மையான அதன் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. திடீரென்று கடலின் நடுவே புகையைக் கக்கியபடி பந்துபோல் எழுந்தது. அதே சமயத்தில் வாசுகி பாம்பானது பயத்தில் தன் பங்கிற்கு விஷத்தைக் கக்கியது! கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி பாம்பு கலக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து "ஆலாலம் விஷம்'' என்ற பெயர் பெற்றது.

இந்தக் கொடிய விஷத்தின் வெப்பத்தால், அண்ட சராசரமே பாதிக்கப்பட்டது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணுபகவான் இந்த விஷத்தின் வேகத்தால் நீலநிறம் ஆனார். இந்தக் கொடிய ஆலகால விஷமானது அசுரர்களையும், தேவர்களையும் சூழ அவர்கள் சிவபெருமானை நாடி ஓடினார்கள்.

அவர்கள் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை அடைய வலப்பக்கம் செல்லலாம் என்றால் அங்கேயும் கருப்பு விஷப்புகை சூழ்ந்து வந்தது. இதனால் அவர்கள் சிவபெருமானைத் தரிசிக்க இடப்பக்கமாக ஓடினார்கள். இடப்பக்கமும் விஷப்புகை சூழ்ந்து வந்தது.

எனவே அவர்கள் செய்வதறியாது மீண்டும் வலப்பக்கமும், இடப்பக்கமும் ஓடினார்கள். கோமுகம் வழியாகவும் கண்டு தரிசிக்க முயற்சித்தனர். அவ்வப்போது இறைவன் சந்நிதானம் இருக்கும் நேர் எதிரிலும் ஓடினார்கள். இதனால் எந்தப் பயனும் கிட்டாத இவர்கள் நந்திதேவரைச் சரண் அடைந்து தாங்கள் ஈசனுடைய தரிசனம் பெற உதவும்படிக் கேட்டுக் கொண்டனர்.

நந்திதேவருடைய உதவியினால், சிவதரிசனம் கிடைத்தது. இதனால் தான் "பிரதோஷ'' வழிபாட்டின் போது நந்திதேவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது! பிரதோஷத்தின் போது முதலில் நந்திதேவருக்குப் பூஜை முடித்தபிறகே, ஈஸ்வரனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.

மற்றும் ஆலகால விஷம் துரத்திய போது இவர்கள் ஈசனை வழிபட மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில்தான் பிரதோஷ காலத்தில் மட்டும், செய்யப்படும், "சோம சூத்ரபிரதட்சணம்'' செய்யப்படுகிறது! இதன்பின் ஈசனிடம் தஞ்சம் புகுந்த தேவர்கள், தங்களை "ஆலாலம்'' விஷத்தில் இருந்து காக்கும்படி வேண்டிட, சிவபெருமான், தம் அருகிலிருந்த சுந்தரனாரை அழைத்து, அந்த விஷத்தை இவ்விடத்துக்குக் கொண்டுவரும்படிப் பணித்தார்.

அதன்படியே சுந்தரரும், அணுக முடியாத அந்த அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். ஈஸ்வரனும் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான தேவர்களைக் காக்கும் பொருட்டு, அதனை அமுதம் போல் உண்டருளினார்.

இதனைப் பார்த்த ஈஸ்வரி அந்த விஷமானது உள்ளே செல்லாதபடி ஈசனின் கழுத்தை பிடித்து, இறைவனின் உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து விடாமல் இருக்கவும், வெளியில் உமிழ்ந்தால், வெளியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் எனக் கருதி அவ்வாறு செய்ய, விஷமானது ஈசனுடைய தொண்டையிலேயே தங்கி அமுதமாக மாறியது.

அதே சமயம் அது தன்னிடமிருந்த விஷத்தை வெளிப்படுத்தியதால் ஈசனுடைய கழுத்து கருத்துப் போயிற்று. இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு, திருநீலகண்டன், நஞ்சுண்டன், நஞ்சுண்டேஸ்வரன், மணிகண்டன் என்ற பெயர்கள் ஏற்பட்டன.

ஏகாதசியன்று காலையில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்கள் அன்று மாலைக்குள் முடிவு பெற்றன. இதன் பிறகு சிவபெருமான் அவர்களை மீண்டும் சென்று பாற்கடலைக் கடையும்படி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது முதலில் லெட்சுமி தோன்றினார். அதனை விஷ்ணு ஏற்றுக் கொண்டார்.

அடுத்து காமதேனு தோன்றியது. அதனை தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்றுக் கொண்டான்! இதன் பிறகு தொடர்ந்து பாற்கடலில் ஐராவதம், கற்பகவிருட்சம், சிந்தாமணி, சூடாமணி, உச்சை சரவம் என்ற குதிரை ஆகியன வெளிப்பட்டன. இவைகள் யாவற்றையும் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல், பாற்கடலைக் கடைவதில் எல்லாரும் முனைந்திருந்தனர். மறுநாள் காலை துவாதசியன்று அதிகாலை வேளையில் பாற்கடலிலிருந்து அமிர்தம் தோன்றியது. அந்த அமிர்தத்தை உண்ணவேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் அங்கும் புகுந்து ஒரு தந்திரம் செய்து அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தார்.

பின்பு அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்றனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சி, அசுரரை வென்ற களிப்பு ஆகியவற்றால் தேவர்களுக்குப் போதை ஏற்றியது. எனவே அவர்கள் அமிர்தம் பெறக் காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தார்கள்.

மறுநாள் "திரயோதசி'' அன்று அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு உடனடியாகத் தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார். அவர்களுடைய மகிழ்ச்சியின் பொருட்டு, நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்!

இதன் காரணமாகத்தான் பிரதோஷ தினத்தன்று நந்திதேவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டது. இவ்விதம் நந்திபகவானைக் குனிந்து வணங்குவதை, இப்பெருமானின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதாகக் கருதி கொண்டு இப்பழக்கம் தொடர்ந்து வருகிறது!

இது ரிஷபப் பெருமானின் காதுகளில் ரகசியம் பேசுவதல்ல, இரு கொம்புகளின் இடையே ஈசனைக் கண்டு வணங்குவதாகும்! பிரதோஷ வேளையில் நந்திபகவானின் இரண்டு கொம்புகளின் நடுப்பகுதியைத் தொட்டு, "சிவாயநம'' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது வறுமை, கடன், நோய், மரண பயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும்.

மேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு ஆராதனையானவுடன், நந்திபகவானுக்கு ஆராதனை நடைபெறும். அதன்பிறகு தான் உற்சவர் கோவிலை வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். *

ஏன் நந்தியின் குறுக்கே போகக்கூடாது?

ஏன் நந்தியின் குறுக்கே போகக்கூடாது?
சிவாலயங்களில் கர்ப்பக் கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமம் இறைவனைத் தாங்குகிறது.

அது விடும் மூச்சுக் காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது.

இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து கும்பிடுவதும் கூடாது என்பது வழக்கில் இருக்கிறது.

ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன், இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.

Monday, January 6, 2014

தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் :சேத்தியாதோப்பு

தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் :

இக்கோவிலின் முதல் மரியாதைகளும் உரிமைகளும் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள "பூதங்குடி " பகுதி "சேத்தியார் " பட்டம் கொண்ட வன்னியர் குடும்பத்திடம் உள்ளது ....

இந்த கோவிலை பற்றிய செய்தி:

சுமார் 200 ஆண்டு களுக்கு முன்பு, வனம் போன்ற பகுதியாக பூதங்குடி இருந்தது. குடியிருப்பு மிகக் குறைவாக இருந்த காலம். தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தலைமைப் பொறியாளராக இருந்த அமரர் ஜெயராமன் இவ்வூரைச் சேர்ந்தவர். இவரது பரம்பரைக்கு சேத்தியார் குடும்பம் என்ற பட்டப்பெயர் உண்டு. அத்தகைய சேத்தியார் குடும்பத்து வாலிபர் ஒருவர் ஒருசமயம் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றார். அப்படிப் போகும் வழியில் சுமார் ஐந்து வயதுள்ள சிறு பெண்பிள்ளை காட்டில் தன்னந்தனியாக சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தார். மிருகங்கள் வாழும் இப்படிப்பட்ட கொடூரமான காட்டுப் பகுதியில் எப்படி இந்தச் சிறுமி தன்னந்தனியாக சிறிதும் பயமின்றி நடமாடுகிறாள் என்று வியப்பும் ஆச்சரியமும் மேலிட, அந்தச் சிறுமியை அணுகி, ""எப்படியம்மா இந்தக் காட்டிற்குள் தனியாக வந்தாய்'' என்று விசாரித்தார். அந்தச் சிறுமியோ மிகத் தெளிவாகப் பேசினாள். ""இந்தக் காட்டுவழியே உறவினர்கள் ஊருக்குப் போக என் பெற்றோருடன் வந்தேன். வரும் வழியில் பாதை தவறிவிட்டேன். பெற்றோர் சென்ற பாதை தெரியாமல் சுற்றிச் சுற்றி வருகிறேன்'' என்று சொன்னாள். அந்தச் சிறுமிக்கு ஆறுதல் கூறிய அவர்,

""பயப்படாதே, என்னோடு வா'' என்று தமது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

சிறுமியோடு ஊருக்கு வந்தபிறகு, "இப்படிப்பட்ட சிறுமியை காட்டில் கண்டுபிடித்து அழைத்து வந்துள்ளோம். அவளது பெற்றோர், உறவினர்கள் யாராவது இருந்தால் வந்து அழைத்துப் போகலாம்' என்று அக்கம்பக்க ஊர்களுக்கெல்லாம் தகவல் அனுப்பினார். ஆனாலும் யாருமே அக்குழந்தையைத் தேடி வரவில்லை. "சரி, இவள் யார் வீட்டுக் குழந்தையாக இருந்தாலும் இருக்கட்டும்; இனிமேல் இது நம் வீட்டுக் குழந்தை. நாமே வளர்ப்போம்' என்று முடிவு செய்து, அந்தச் சிறுமிக்கு நாச்சியார் என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார்.

அப்பகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்ற அந்தக் குடும்பத்தில், வனத்தில் கண்டெடுத்த நாச்சியார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தேவதையாக வளர்ந்து பருவ வயதை அடைந்தாள்.

இந்நிலையில் நாச்சியாரை மகள்போல் வளர்த்து வந்தவர், திடீரென்று உடல்நலம் கெட்டு இறந்து
போனார். சேத்தியார் மறைவு அப்பகுதி மக்களை கடுந்துயரத்தில் ஆழ்த்தியது. அவரது உடலைத் தகனம் செய்யக் கொண்டு போனார்கள். அப்போது நாச்சியார், ""நானும் இடுகாட்டிற்கு வருவேன்'' என்றாள். ஊர்ப்பெரியவர்கள், ""பெண் பிள்ளைகள் வரக்கூடாது'' என்றார்கள். ""காட்டிலே தனியாக நின்ற என்னை இங்கு கொண்டு வந்து வளர்த்த தந்தை அவர்.

அப்படிப்பட்டவரின் இறுதிச் சடங்கின்போது நானும் உடனிருந்து பார்க்கவேண்டும்'' என்று பிடிவாதம் செய்தாள். வேறு வழியின்றி நாச்சியாரையும் மயானத்துக்கு அழைத்துச் சென்றனர். சேத்தியாரின் உடல் முழுவதும் விறகுகளால் மூடப்பட்டு எரியூட்டும்போது, யாரும் எதிர்பாராதவிதமாக அத்தீயில் பாய்ந்து தன்னையும் எரித்துக்கொள்ள முயன்றாள் நாச்சியார். அவளைத் தடுத்து, ""நீ வாழவேண்டிய பெண். உனக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை'' என்று ஊர்ப்பெரியவர்கள் அறிவுரை கூறினர்.

ஆனால் நாச்சியார் மிகப் பொறுமையாக- நிதானமாக- உறுதியோடு சொன்னாள். ""நீங்கள் நினைப்பதுபோல் நான் சாதாரண பெண்ணல்ல. தெய்வ அருளால் இங்கு வந்தவள். மற்ற பெண்கள்போல் கணவன்- மனைவி, பிள்ளைகள், குடும்பம் என்று சாதாரண வாழ்க்கை வாழ வந்தவள் அல்ல நான். உங்களையும் உங்களைப் போன்ற மக்களையும் தெய்வமாக இருந்து வாழவைக்க வந்தவள் நான். உங்களுக்கு நான் சொல்வதில் சந்தேகமிருந்தால் நான் சொல்வதுபோல செய்யுங்கள். ஒரு தாம்பூலத் தட்டில் பூ, பழம், தேங்காய், புடவை உட்பட பூஜைப் பொருட்களை வைத்துக் கொடுங்கள். அதை என் கையில் ஏந்தியபடி தீயில் பாய்கிறேன். அப்போது நான் மட்டுமே எரிந்து பஸ்பமாக மறைந்துவிடுவேன். என் கையில் உள்ள தட்டும் பூஜைப் பொருட்களும் தீயில் எரியாமல் நீங்கள் எப்படி என் கையில் கொடுத்தீர்களோ அதேபோன்று இருக்கும். அப்போது நான் சொன்னது உண்மை என்பது உங்களுக்குப் புரியும்.

அதன்பிறகு என்னை தெய்வமாக நினைத்து வணங்குங்கள். உங்களுக்கு எல்லா நலமும் கிடைக்கச் செய்வேன்'' என்று நாச்சியார் சொல்லிமுடித்தாள்.

ஊர் மக்களும் நாச்சியாரின் பேச்சிற்கு கட்டுப்பட்டனர். தாம்பூலத் தட்டோடு நாச்சியார் தீயில் பாய்ந்தாள். நாச்சியார் மறைந்து போனாள். அவள் சொன்னதுபோலவே, தாம்பூலத் தட்டும் அதிலிருந்த பூஜைப் பொருட்களும் கொஞ்சம்கூட தீயில் கருகாமல் அப்படியே இருந்தன. நாச்சியார் தெய்வமானாள் என்பது உறுதியானது.

அதன்பிறகு அப்பகுதியிலிருந்த அழிஞ்சி மரத்தினடியில் நாச்சியார் நினைவாக செங்கல்லால் சிறிய சந்நிதி அமைத்து சேத்தியார் குடும்பத்து வம்சாவழியினர் வழிபட்டு வந்தார்கள்.

# chiyan vasanth